Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மிக நீண்ட நாட்களாக  என்ன மொழி என்றே தெரியாமல் இரசித்து வந்த ஒரு வசீகரமான பாடல் எந்த மொழி என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்.அது ஒரு ஜப்பானிய நாட்டுப் பாடல். இந்தப் பாடலை பல பேர் பல விதமாக பாடியுள்ளனர். எனக்குப் மிகவும் பிடித்த அந்த பாடல் இதோ.


பி.கு : பாடல் எதைப் பற்றியது என்பது தெரியவில்லை.

இன்று மக்கள் தொலைக்காட்சியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தொடர் ஒன்றைப் பார்த்தேன். மக்கள் தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறது. அதனால் சில நல்ல விசயங்களையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் தொட்டே சுபாஷின் முகம் மிகப் பழகிப் பேசிச் சிரித்த முகம் போல இருந்தது. இதற்கு முன்பும் சுபாஷினுடைய புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது கிடையாது.

சரி இது ஏதாவது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே பாலபாரதியின் முகம் மனசுக்குள் கோடிட்டுச் சென்றது. ஆம் பாலபாரதியின் முகச் சாடையும் சுபாஷின் முகச் சாடையும் வியக்கத்தக்க விதமாக ஒத்துப்போகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள.

பாலபாரதியும் நேதாஜி சுபாஷும்

பாலபாரதியும் நேதாஜி சுபாஷும்

குட்டி மகள்

குட்டி மகள்

நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.

வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு கையை நீட்டினேன். அந்த மனிதர் என்னிடம் ஒரு சிறிய நோட்டீஸ் ஒன்றை கொடுத்தார். அந்த நோட்டீசில் இருந்த கடைசிப் பத்தியை இங்கே தருகிறேன்.

“கர்த்தராகிய இயேசுவே, நீரே சமாதனப் பிரபு. உம்முடைய சமாதனப் பிரபு. உம்முடைய் சமாதானம் எனக்குத் தேவையாயிருக்கிறது. என்னுடைய பாவமே உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறது என்பதை நான் அறிவேன். தயவாய் என் பாவங்களை மன்னித்து, உம்முடைய இரத்தத்தினால் என் இருதயத்தை கழுவி சுத்திகரியும். இன்று நான் உம்மை என்னுடைய தேவனாகவும் என் இரட்சகராகவும் எற்றுக்கொள்கிறேன். நீர் என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும்படி நான் ஆயத்தமாய் இருக்கிறேன். தயவாய் எனக்கு உதவி செய்தருளும். என்னைக் குணமாக்கும் ஆண்டவரே, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும். ஆமென்.”

என்ன உங்களுக்கு இதைப் படித்தவுடன் இந்தியா மற்றும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய நினைப்புதான் வருகிறதா. ச்சே..ச்சே..இது அப்படியெல்லாம் இல்லை.

குறிப்பு : பழைய பதிவு புதுப்பிக்கப்பட்டது

கூட்டுக் கவிதை

பின் வருவது, தோழர் கேகே (கொண்டசாமி) அவர்களின் சமீபத்திய படைப்பான ‘பாரமாய் அழுத்தும் விக்கிரமாதித்யச் சுமை’ எனும் கவிதை தொகுப்பின் முகப்பு அட்டைக்கான கூட்டுக் கவிதை, எனது மற்றும் தோழர் பாரதி சே அவர்களின் வரிகள்…

அட்டைப்படம் – மு.க.பகலவன்

புரண்டு விழும் நிகழ்வுகள்
புறமுதுகின் விலா எலும்புகளை
விகாரமாய் அழுத்த
யுகம் யுகமாய்த் தொடர்கின்றன
படபடத்து உடையும் கனவுகள்.
கனவுகள் குழைத்த வெம்மையில்
தலை நனைத்த தூரிகை,
தீற்றல்களாய் உயிரெழும் நினைவுத்தீ.

சக்கரம்

 

மிதிபடுதலில்
வேகமெடுக்கும் பயணங்கள்.
பின்னோக்கிச்
சுழலத் தொடங்குகின்றன
சக்கரங்கள்.

 

“ஒருவன் தனக்குள் இருக்கக்கூடிய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் அச்சிந்தனையின் மீது அவன் கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.”

- ஜென் தத்துவம்

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த நான் மெதுவாக மாறத் தொடங்கிக் கொண்டிருந்தேன், எனக்குள் இருந்த சில விசயங்களை நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது. கல்லூரியில் இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டிருந்த போதுதான் இந்த அநேக மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தன. காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து, நமக்குள் ஏற்றப்பட்ட கருத்துக்களை துரத்தியடிப்பது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல.

என்னுள் பல எண்ணற்ற கேள்விகளை நிரப்பிக் கொண்டு குழம்பிய நிலையில் பல நேரம் சுத்தியிருக்கிறேன். அந்த கேள்விகளுக்கான விடைதேடுதலில் கிடைத்த உறவுகள் ஏராளம். அந்தக் கேள்விகளுள், சிலவற்றுக்குப் பதிலைத் தேடி எடுத்திருக்கிறேன். பலவற்றுக்கான பதில் தேடல் இன்னும் தொடர்ந்த படியே இருக்கிறது. தனக்குள்ளான முரண்பாடு, அதைக் களைவதற்கான முயற்சிகள், முயற்சிகளின் நீட்சியான தேடல். இது தான் நம்மை கடைசி வரைக்கும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாள் திடீரென வந்து சேர்ந்தது அந்த மின்னஞ்சல். அருப்புக்கோட்டையிலிருக்கும் தோழர் மதிகண்ணன் அனுப்பியிருந்தார். “Please read and comment” என்ற ஒற்றை வரி உள்ளடக்கத்துடன் ஒரு கோப்பினைப்பு வந்தது. அதில் ஒரு கதை “விரிவாக்கப் பகுதி” என்று. மணல் வீடு சிற்றிதழில் வெளிவந்த அந்த கதையின் சுருக்கம் :
ஒரு இளைஞனை ஊருக்கு நடுவில் உள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த இளைஞனின் பெயர் ஏனாதி. அவன் குழந்தை இல்லாத மீள்ச்சாமியுடன் வசித்து வருகிறான். அவர்கள் சொந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்தில் உள்ள விரிவாக்கப் பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள். அங்கு மீள்ச்சாமி ஒரு மளிகைக் கடை ஆரம்பித்து ஊரில் நல்ல பெயர் எடுக்கிறார். ஏனாதி ஒரு மாட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவனைக் கட்டிப் போட்டு விட்டு ,மீள்ச்சாமிக்கு தகவல் சொல்லி அனுப்புகிறார்கள். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வருகிறார் மீள்ச்சாமி. வந்தவர் ஏநாதியைப் போட்டு அடிக்கிறார். அப்போது ஏனாதி மீள்ச்சாமியைப் பார்த்து, அவர் தான் வீட்டில் இருக்கும் போதே மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதால்தான் தான் இப்படி செய்ய நேர்ந்ததாகக் கூறுகிறான். இதனை ஒரு கம்பியூட்டர் ஏஐ வைரஸ் கூறுவதாக வருகிறது. இக்கதையைக் கூறிவிட்டு அது சில கேள்விகளை கேட்கிறது.

அப்படி அந்த ஏஐ கேட்ட கேள்விகளில் ஒன்றாக வருவதுதான் “சமூக ஒழுங்கு தனி மனித ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? அல்லது தனி மனித ஒழுங்கு சமூக ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா?” என்ற கேள்வி. இந்த கேள்விக்கான விடை தேடும் படலத்தில் சில புத்தகங்களை வாசித்தலும் அதன் தொடர்ச்சியாக நண்பர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து நான் கற்றுக் கொண்டவைகள் மற்றும் விடை தேடல் அனுபவங்களின் தொடர் பதிவுகள் தான் இவை.

அந்த கதையை பதிவிறக்கி வாசிக்க இங்கே சொடுக்கவும்.

- தேடல்கள் தொடரும்

தந்தையும் மகளும்

நேற்று சில நகர்கலைக் கலைஞர்களை வெகுநாட்களுக்கு பின்பு சந்தித்தேன். கே கே நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஒரு சூப் கடையில் வழக்கம் போல அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதே சாலையில் அமைந்துள்ள அவர்களது அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நண்பருக்கு பின்னால் இருந்த கணிதிரையில் ஒரு நகர்கலைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது அந்த நண்பர் இந்த படத்தப் பாருங்களேன் என்று சொன்னார். அந்த படம் தந்தையும் மகளும் (Father and Daughter ). தனது தந்தையின் அரவனைப்பிற்காக ஏங்கும் ஒரு பெண்ணுடைய கதை.

ஒரு அப்பாவும் மகளும் சைக்கிளில் பயனம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த அப்பா ஒரு ஏரியில் அந்த குழந்தையை கரையில் விட்டு விட்டு படகில் சொல்கிறார். தனது அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை ,பிறகு சென்றுவிடுகிறது . பின்னர் அந்த குழந்தை ,தனது ஒவ்வொரு பருவத்திலும் தனது அப்பாவைத் தேடி அந்த ஏருக்கரைக்கு வருகிறது. கடைசியாக மூதாட்டியாக வரும்போது நீர் வற்றிப் போன ஏரிக்குள் இறங்கி தனது அப்பாவைப் பார்த்து மீண்டும் குழந்தைப்பருவத்திற்கே திரும்புகிறது .

இது பெண்கள் தனது தந்தையின் பாசத்திற்காக தங்களது வாழ்நாள் முழுக்க ஏங்கும் விசயம் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நல்ல படைப்பிற்கு மொழி என்பது தடையாக இருக்காது என்பதை நிரீபித்திற்கும் ஒரு மொழியற்ற படைப்பு.

இந்த படைப்பு எனக்கு மனுஷ்யபுத்திரனின் வேறொரு மழை நாள் என்ற கவிதை நினைவிற்கு வந்தது.

சென்னை பெருநகர சாலைகளில் என்றும் தீராத இசை இது தான். இதற்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களது மனிதம் இந்த இசையில் மெல்ல மெல்ல கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.

( கேட்பொலித் துண்டு பதிவு செய்யப்பட்ட இடம் : சென்னை தி-நகர் சப்வே. ஆடியோ பதிவை எப்படியோ போட்டாச்சு.  உதவிய தோழர்களுக்கு நன்றி)

ஒரு ஆடியோ  பதிவு போட்டுவிட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை . ஆனால் வேர்ட்பிரசில் எப்படி இதைச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை ? உதவுங்கள்.

பழைய பதிவுகள் »