ஒரு நாளில்

நினைவுகள்
சொற்கள்
செயல்கள்
காய்ந்து
கைகளும்
கால்களும்
தூர்ந்து – பின்
மெல்லச் சரிகிறேன்
கடும் வெயில்
பொழிந்து
உலராமல் கிடந்த
கான்க்ரிட் தரையில்

Advertisements

அன்புற்கினிய இரவு

இரவு
அடர் வனத்தின் நடுவே
கொடிய விலங்குகளுக்கு
உணவாவதிலிருந்தும்

கடல் பயணத்தின் போது
தவறி விழுந்து
அலைகளினால்
அழுந்தப்படுவதிலிருந்தும்

பூமி அதிர்ந்தபின்
நொருங்கிக் கிடக்கும்
கட்டிட இடிபாடுகளிலிருந்தும்

இரயில் நிலையத்தை
தூள் தூளாக்கிய
குண்டு வெடிப்பிலிருந்தும்

பறத்தலின் போது
திடீரென இறக்கைகள்
களவாடப்பட்டு
ஆகாயத்திலிருந்து
தலைகீழாக விழுவதிலிருந்தும்

காரணமே இல்லாமல்
துரத்திக் கொண்டிருப்பவனின்
கைகளுக்கு அகப்படா வண்ணம்
நிகழும் முடிவுறா
ஓட்டத்திலிருந்தும்

பத்திரமாக மீட்டெடுத்து
பகலின் கைகளில்
என்னை
கொடுத்துச் செல்கிறது

அன்புற்கினிய இரவொன்று

*

எழுத்தும் வாசிப்பும்

பல நாட்கள் ஆகினறன நான் கடைசியாக எழுதி. கணினித் துறைக்குள் நுழைந்தது முதல் எழுத்தும் வாசிப்பும் படிப் படியாகக் குறைந்து கிட்டத்தட்ட நின்று விட்டது என்றே சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது.

இன்னும் கூட படிக்க வேண்டும்  எழுத வேண்டும் என்கிற உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தும் வாசிப்பும் நம்மை நாமே உணர்வதன் ஒரு வழி என்று நினைக்கிறேன்.

சிலர் சத்தம் காட்டாமல் எழுதிக் குவிப்பதைப் பார்க்கும் பொழுது ஏக்கமாக இருக்கும். எப்படி இவர்கள் நேரத்தைக் கையாள்கிறார்கள், எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் இவர்களுக்கு நேரம் இருக்கிறதா என்றெல்லாம் எண்ணங்கள் பலவாறு செல்லும்.

நண்பர்கள் மற்றும் தோழர்கள் இலக்கியம்  குறித்த உரையாடல்கள் நிகழ்த்தும் போது வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிகிறது.

எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அதிமாக மற்றவர்களிடம் பேசவும் விவாதிக்கவும் முடிந்த என்னால், சென்னையில் இருந்த நாட்களில் இந்த சுபாவமும் மெதுவாக மாற்றத்தைக் கண்டிருக்கிறது.

ஆனால் எனக்குள்ளான என் உரையாடல்கள் அதிகரித்திருக்கிறது. அதுவே பயமாகவும் இருக்கறது. மறந்து போய் சத்தமாய் பேசிவிடுவோமோ என்கிற பயம்.

வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உண்டான சரியான இடம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளாதது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதேபோல் சுயம் பற்றிய தேடலும் என்னை இறுக்கி வைத்திருக்கிறது.

பள்ளிக்கு வெளியே வானம் – ஒரு பார்வை

பள்ளிக்கு வெளியே வானம்அமேசான் கின்டில் கருவி வாங்கியவுடன், அக்கருவிக்கான தமிழ் நூல்கள் கிடைக்கிறதா என்று பார்த்த போது கண்ணில் பட்டது, freetamilebooks.com . அத்தளத்தில் நுழைந்து துழாவியபோது கிடைத்தது இந்த புத்தகம் பள்ளிக்கு வெளியே வானம். ராகுல் ஆல்வாரிஸ் என்பரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் அன்பரசு சன்முகத்தால் மொழி பெயர்க்கப்பட்ட நூல். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இந்நூல் வெளியிடப்பட்டது என்பது இன்னொரு சிறப்பு. கின்டிலில் நான் வாசித்த முதல் நூலே தமிழில் என்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

இந்த புத்தகம், ராகுல் பள்ளிப் படிப்பை முடித்த பின் மேற்படிப்பு தொடர்வதற்கு முன்னால் ஒரு ஆண்டு காலம் விடுமுறை அவனது பெற்றோர்களால் ஒரு சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. அவன் இந்த ஒரு வருட காலத்தை பயனுள்ளதாக அவனுக்குப் பிடித்த வழிகளில் செலவிட்டுக்கொள்ளலாம். தினமும் அவன் நாட்குறிப்புகளும் எடுக்க வேண்டும். அப்படி அவன் எடுத்த குறிப்புகளை வைத்தே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

ராகுல் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்தி, பல்வேறு விதமான அனுபவங்களை சேகரிக்கிறான். இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான தனது ஈடுபாட்டினால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாம்பு, முதலைப் பன்னைகளில் தங்கி அவற்றைப் பராமரிப்பது, அதன் மூலம் அவற்றின் வாழ்க்கையை அறிந்து கொள்வது என இருக்கிறான். ஓராண்டிற்குள்ளாகவே மற்ற மாணவர்களுக்கு பாம்புகள் மற்றும் முதலைகள் பற்றி வகுப்பெடுக்கும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான். தன்னிடம் செல்லமாக ஒரு ஆமையையும் வளர்க்கிறான்.

பள்ளி முடித்து கல்லூரி முடித்து வேலைக்கு சென்று ஒரே மூச்சாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, இந்த மாதிரியான ஒரு சூழலை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அந்த வகையில் ராகுலை கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய கல்விச் சூழலில் மனப்பாடம் செய்து அதனை அப்படியே ரிப்பீட் செய்வது என மாறிவிட்ட நிலையில், சமூகம் மாணவர்களின் மீது ஏற்றும் சுமைதான் அதிகம். ராகுலின் பெற்றோர் மீது சிறந்த மதிப்பு உருவாகுகிறது.

தற்சமயம் ராகுல் பாம்பு மனிதன் என்று அழைக்கப் படுகிறார். Wildlife போட்டோகிராப்பராக தனது வாழ்க்கையைத் தகவமைத்துக் கொண்டுள்ளார்.

இந்த புத்தகத்தை இங்கே இலவசமாக தகவிறக்கிப் படிக்கலாம் – http://freetamilebooks.com/ebooks/pallikku-veliye-vaanam/

ராகுல் ஆல்வாரிஸின் வலைதளம்  – http://rahulalvares.com/

அந்த மரத்திலிருந்து

அந்த மரத்திலிருந்து
தினம் ஒரு இலையாவது
உதிர்ந்தவண்ணம் இருந்தது

நிழலுக்கேனும் கிளையில்
அவ்வப்போது வந்தமர்கின்ற
பறவைகள்
தன் இரையைக் கொத்தியபடியே
ஒரு இலையை விழச்செய்து
கொண்டிருக்கின்றன.

அணில்கள்
வௌவால்கள்
சிலந்திகள்
என அனைத்தும்
தத்தம் பங்குக்கு
மரத்தை அசைத்தபடி
இருக்கின்றன.

எங்கும் வெயில் பரவியிருந்த
ஒரு கோடை மதிய உணவு
இடைவேளையில்
மரம் தன்னிலிருந்து
உதிர்த்துக்கொள்கிறது
வனத்தைப் பற்றிய
பெருங்கனவொன்றை

இன்னும்
அந்த மரத்திலிருந்து
தினம் ஒரு இலையாவது
உதிர்ந்து கொண்டேதான்
இருக்கும்

யூமாவாசுகி கவிதை – 1


வாழ்வின்
வேர்பிடுங்கியெறியும்
வெறிச் சூறாவளியில்
நாவறுந்த குயிலின்
தொண்டை வெடித்த
வெளிவரும் குரல் நான் தேடுவதைப்பாடும்
எரிமலைக்குள்ளும் எதிரொலித்து
பீறிடும் தீக்குழம்பு
பனியாறாகப் பெருகும் – குயில்
இழந்ததை எண்ணி
ஏங்கியழும் ராகத்தில்
தனித்த இடம் பார்த்து சூரியன்
அழுதுகொண்டிருப்பான்
அப்போது என் தோழா
இருண்டிருக்கும் சில தினங்கள்

– இரவுகளின் நிழற்படம் தொகுப்பு